கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட டிரைவர்
கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட டிரைவர்மல்லசமுத்திரம், : மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்ட், திருச்செங்கோடு - சேலம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு வரும் ஒரு சில அரசு, தனியார் பஸ்கள், பல ஆண்டுகளாக பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல், சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி வந்தன. இதனால், இங்கு வரும் மாணவர்கள், பொதுமக்கள், பஸ்சுக்காக சாலையில் நிற்பதா அல்லது பஸ் ஸ்டாண்டிற்குள் நிற்பதா என, குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், 'உங்களைத்தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடந்தது. அதில், பஸ் ஸ்டாண்டில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உமா, அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்துசெல்ல வேண்டும் என, டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.ஆனால், நேற்று மதியம் வழக்கம்போல சேலத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் ஒன்று, பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் சாலையிலேயே சென்றது. கலெக்டரின் உத்தரவை சுட்டிக்காட்டி, தட்டிக்கேட்ட அப்பகுதி மக்களிடம், அந்த பஸ் டிரைவர், 'அபராதம் வேண்டுமானால் விதித்துக்கொள்ளுங்கள்; அதனை நான் கட்டிக்கொள்கிறேன்' என, இருமாப்புடன் தெரிவித்துள்ளார்.அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்துசெல்ல வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டிருந்தும், அந்த உத்தரவை மதிக்காமல், சாலையிலேயே சென்றது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.