வெப்படை ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டர் நியமனம்
பள்ளிப்பாளையம், எஸ்.ஐ., அந்தஸ்தில் இருந்து தரம் உயர்த்தப்பட்ட, வெப்படை போலீஸ் ஸ்டேஷனுக்கு, இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் இருந்து, 2019 மார்ச் மாதம் பிரித்து, வெப்படை போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. வெப்படை போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் பாதரை, எலந்தகுட்டை, ஆனங்கூர், மோடமங்கலம், சவுதாபுரம் உள்ளிட்ட 7 பஞ்சாயத்துகள், மற்றும் படவீடு டவுன் பஞ்சாயத்து உள்ளடங்கி உள்ளது. பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் இருந்து பிரிக்கப்பட்ட பின், வெப்படை போலீஸ் ஸ்டேஷன் சிறிய கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.இதையடுத்து, 2023 ஆண்டு புதியதாக, 84.50 லட்சம் ரூபாய் மதிப்பில் அனைத்து வசதிகள் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வெப்படை போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு உட்பட்ட, வெப்படை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., தலைமையில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், மக்களின் பிரச்சனைகளை தொய்வு இல்லாமல் உடனுக்குடன் தீர்வுகாணவும், எஸ்.ஐ., அந்தஸ்தில் இருந்த வெப்படை போலீஸ் ஸ்டேஷனை, இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு தரம் உயர்த்தி அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிந்த சங்கீதா, வெப்படை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். ஸ்டேஷனின் முதல் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்ட சங்கீதா நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.