வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் விஜயகாந்த் தலைமை வகித்தார். அதில், தமிழக வருவாய்த்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவை துறையில் பணியாற்றி வரும் அனைத்து நிலையிலான பணியாளர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். சிறப்பு திட்டங்களில் போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்கு நிர்ணயித்து, நெருக்கடிக்கு ஆளாக்குவதை தவிர்க்க வேண்டும்.அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஆய்வு கூட்டம் என்ற பெயரில் பணி நெருக்கடி ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒப்பந்த, தற்காலிக, தொகுப்பூதிய பணியிடங்களை நீக்கி நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.வருவாய்த்துறை அலுவலர் சங்கம், நில அளவையர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு கிராம ஊழியர் சங்கம், கிராம உதவியாளர் சங்கம் உள்ளிட்டவற்றின் நிர்வாகிகள், பணியாளர்கள் பங்கேற்றனர்.