நாமக்கல் மாவட்டத்தில் ரூ.6.10 கோடிமதிப்பில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
நாமக்கல் மாவட்டத்தில் ரூ.6.10 கோடிமதிப்பில் பொங்கல் தொகுப்பு வழங்கல் நாமக்கல் : திருச்செங்கோடு, வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று கலெக்டர் உமா, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது: தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில், 909 ரேஷன் கடைகளில், 4,94,120 ரேஷன் கார்டுதாரர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், 45 ரேஷன் கடைகளில், 43,593 தகுதியான ரேஷன் கார்டுதாரர்கள், மகளிர் சுய உதவிக்குழு மூலம் 4 ரேஷன் கடைகளில், 1,590 தகுதியான ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில், 730 தகுதியான ரேஷன் கார்டு தாரர்கள் என மொத்தம், 958 ரேஷன் கடைகளில், 5,40,033 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ரூ.6.10 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு பேசினார்.திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினி, வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் யசோதாதேவி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செல்வராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.