நாமக்கல்: 'விவசாயிகள், உழவன் செயலியில் பதிவு செய்து மானிய திட்டங்கள் பெற' நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி, யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விபரங்களை விவசாயிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், உழவன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த செயலி மூலம், விவசாயிகள் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு தேவையான, 24 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. வேளாண்மைத்துறை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, சான்றளிப்புதுறை, நீர்வடி பகுதி திட்டம் மற்றும் வேளாண்மை பல்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும், இந்த செயலி மூலம் மண்வளம், மானிய திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர் காப்பீடு விபரம், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு, வேளாண் இயந்திரங்கள் வாடகை விபரம், சந்தை விலை, வானிலை அறிவுரை, உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், பயிர்சாகுபடி வழிகாட்டி, இயற்கை விவசாய விளைபொருட்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் பொருட்கள் விபரம், அணை நீர்மட்டம், வேளாண் செய்திகள், கருத்துக்கள், பூச்சி, நோய் கண்காணிப்பு பரிந்துரை, அட்மா பயிற்சி மற்றும் செயல் விளக்கம் உள்ளிட்ட விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.மேற்காணும், உழவன் செயலியை நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அனைவரும் தங்களது கைபேசியில் பதிவிறக்கம் செய்து வேளாண்மை சார்ந்த தகவல்களை அறிந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.