மோகனுார்: மோகனுார் பெரியார் நகரை சேர்ந்தவர் லோகநாதன், 30. இவர், மோகனுார் அடுத்த காட்டூரில் உள்ள நிதி நிறுவனத்தில், சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். கடந்த, 17 இரவு, 7:00 மணிக்கு, பணியை முடித்துக்கொண்டு, வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, அதே பகுதியை சேர்ந்த விக்ரம், சவுந்தர்யன், வாங்கலை சேர்ந்த மணி, 18 வயது சிறுவன் என, 4 பேர், புற்றுக்கண் கோவில் அருகே, சாலையை மறித்து உட்கார்ந்து, சரக்கு அடித்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த லோகநாதன், தட்டிக்கேட்டுள்ளார். பின், டூவீலரில் சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற நான்கு பேரும் வழிமறித்து, டூவீலருடன் லோகநாதனை கீழே தள்ளி, தகாத வார்த்தையால் பேசி சரமாரியாக தாக்கினர்.தொடர்ந்து, விக்ரம், தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி, பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுக்க சொல்லி மிரட்டினார். மேலும், சவுந்தர்யன், டூவீலரில் வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து, கழுத்தில் வைத்து மிரட்டினார்.பணம் தரமுடியாது என கூறியதும், லோகநாதனை கத்தியால் கழுத்து, கன்னம் பகுதியில் கிழித்து காயப்படுத்தினர். தொடர்ந்து, அவரது பாக்கெட்டில் இருந்து, 500 ரூபாய் பறித்தனர். லோகநாதனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும், உன்னை கொல்லாமல் விடமாட்டோம் எனக்கூறி தப்பி சென்றனர். லோகநாதனை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக, மோகனுார் போலீசார் வழக்கு பதிந்து, சவுந்தர்யனை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய விக்ரம், மணி மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய, மூன்று பேரை தேடி வருகின்றனர்.