மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்ப.வேலுார், செப். 8-விநாயகர் சதுர்த்தியையொட்டி, ப.வேலுார் பஞ்சமுக ஹேரம்ப விநாயகருக்கு, 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலில் இருந்து ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். வெயில் தாக்கம் கடுமையாக உள்ளதால், பக்தர்களின் வசதிக்காக பிரமாண்டமான பந்தல் அமைத்திருந்தனர். கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.* பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், 53 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல் வெப்படை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, 21 இடங்களிலும், மொளசி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, 19 இடங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜை நடந்தது. வெப்படை அடுத்த பாரதி நகர் பகுதியில் உள்ள பால விநாயகருக்கு, அப்பகுதி மக்கள் மேள தாளத்துடன் சீர்வரிசை கொண்டு வந்து சிறப்ப பூஜை செய்தனர்.* வெண்ணந்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 34 இடங்களில் தற்காலிக மேடை அமைத்து, 6 அடி முதல் 9 அடி வரை விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை நடந்தது. கோவில்களில் விநாயகருக்கு வெள்ளி கவசம், சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது.* நாமகிரிப்பேட்டை பட்டறைமேட்டில், அப்பகுதி இளைஞர்கள், 6 அடி உயரத்திற்கு களிமண்ணால் விநாயகர் சிலை செய்து அசத்தினர். வேலவன் நகரில், மயிலுடன் கூடிய விநாயகர், நாமக்கல் சந்தைப்பேட்டை புதுார் செல்வ விநாயகர் கோவிலில், 4 தலை விநாயகர் என வித்தியாசமான தோற்றங்களில் சிலைகளை வைத்து பூஜை செய்தனர்.* குமாரபாளையம், உடையார்பேட்டை, ராஜவிநாயகர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. நடன விநாயகர் கோவில், சவுண்டம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவிலில் உள்ள கல்யாண விநாயகர் கோவில், பஸ் ஸ்டாண்ட் கற்பக விநாயகர் கோவில், நடராஜா நகர் விநாயகர் கோவில், விட்டலபுரி கொலு பிள்ளையார், கள்ளிபாளையம் விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.