துறைமுகத்தில் தேங்கிய 2 கோடி முட்டை; இறக்குமதிக்கு ஓமன் அரசு ஒப்புதல்
நாமக்கல்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, ஓமன் அரசு துறைமுகத்தில், 41 கன்டெய்னர்களில் தேங்கியுள்ள இரண்டு கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளதால், ஏற்றுமதியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.நாமக்கல் மண்டலத்தில் இருந்து ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தினமும், 30 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கிடையே, வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் அரசு, முட்டை இறக்குமதியில் கடந்த நவம்பர் முதல் புதிய கொள்கையை கொண்டு வந்து, 60 கிராம் மற்றும் அதற்கு மேல் உள்ள எடைகளை கொண்ட முட்டைகள் மட்டுமே, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என அறிவித்தது.அதனால், நாமக்கல்லில் இருந்து கத்தார் நாட்டுக்கு முட்டை ஏற்றுமதி செய்வது, இரண்டு மாதங்களாக தடைப்பட்டது. ஒரு வாரத்திற்கு முன், ஓமன் நாடும் இந்திய முட்டை இறக்குமதிக்கு அனுமதி அளிக்காமல் நிறுத்தி வைத்தது. அதன் காரணமாக, ஓமன் நாட்டிற்கும், நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்ய முடியாமல் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.அனுமதி நிறுத்தம் காரணமாக, ஓமன் நாட்டின் துறைமுகம் மற்றும் நடுக்கடலில், 10 நாட்களாக, 41 கன்டெய்னர்களில், இரண்டு கோடி முட்டைகள் தேக்கம் அடைந்தன. தேக்கம் அடைந்த முட்டைகளை இறக்குமதி செய்ய, மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.அதையடுத்து, மத்திய அரசு ஓமன் நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் ஏற்றுமதியாளர்களும் கலந்து கொண்டனர். ஆனால் முடிவு எட்டவில்லை. நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், கன்டெய்னரில் உள்ள முட்டைகளை இறக்குமதி செய்ய ஓமன் அரசு ஒத்து கொண்டதாகவும், வருங்காலங்களில் இந்திய முட்டைகள் மற்றும் கோழி இறைச்சி இறக்குமதிக்கு தடை இருக்காது எனவும் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்றுமதியாளர்கள், கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.