23ல் ஆப்பரேஷன் சிந்துார் யாத்திரை பா.ஜ., தலைவர், மத்திய அமைச்சர் பங்கேற்பு நாமக்கல், மே 20
நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மூவர்ண கொடி யாத்திரை, வரும், 23ல் நடக்கிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் உள்ள அக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான ராமலிங்கம் பங்கேற்றார்.தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை பறைசாற்றும் வகையில், பா.ஜ., சார்பில், மூவர்ண கொடி யாத்திரை, வரும், 23ல் நாமக்கல்லில் நடக்கிறது. அதில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். தி.மு.க., உட்பட அனைத்து கட்சியினரும் கலந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில், 'தேசிய ஜனநாயக கூட்டணி' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா ஏற்கனவே அறிவித்துவிட்டார்.தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி, யாருக்கு எத்தனை சீட்டு ஒதுக்குவது என்பது குறித்து, இ.பி.எஸ்., தான் முடிவு செய்வார். தமிழகத்தில் கொள்ளையடித்துக்கொண்டு இருக்கும், தி.மு.க.,வை துாக்கி எறிய வேண்டும் என்பதே எங்களின் தலையாய கடமை. இதற்காக எத்தகைய கூட்டணி முயற்சியையும் மேற்கொள்வோம். தமிழகத்தில், இ.பி.எஸ்., தான் முதல்வர் வேட்பாளர். இவ்வாறு அவர் கூறினார்.