உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெள்ளத்தால் பாதிக்கும் 33 இடங்கள் கண்டுபிடிப்பு

வெள்ளத்தால் பாதிக்கும் 33 இடங்கள் கண்டுபிடிப்பு

நாமக்கல், ''மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்பிற்கு உள்ளாகும், 33 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் துர்கா மூர்த்தி பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தயார் நிலை பணிகள் குறித்து, அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையிலும், இழப்புகளை குறைக்கும் நோக்கத்திலும், சரியாக திட்டமிட்டு பேரிடர் முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.நாமக்கல் மாவட்டத்தில், கடந்த காலங்களில் பெய்த மழை அடிப்படையில், அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகும், இரண்டு இடங்கள், மிதமாக பாதிப்பிற்குள்ளாகும், 30 இடங்கள், குறைவாக பாதிப்பிற்குள்ளாகும், ஒரு இடம் என மொத்தம், 33 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கனமழையால் பாதிப்பிற்குள்ளாகும் என அடையாளம் காணப்பட்ட இடங்களில், உடனடி நடவடிக்கை மேற்கொள்ள பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதிக பாதிப்புக்குள்ளாகும் என கண்டறியப்பட்ட பகுதிகளில், வெள்ளம் வெளியேற கூடிய வழிகள் மற்றும் நிவாரண இடங்கள் ஆகிய விபரங்களுடன் கூடிய டிஜிட்டல் வரைபடம், கிராம அளவில் முதல் பொறுப்பாளர்களின் பட்டியல், உயர் மின்விளக்குகள், மோட்டார் பம்பு செட்டுகள், டீசல் ஜெனரேட்டர் ஆகியவை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். நிவாரண மையங்களில், பொதுமக்களை தங்க வைக்க ஏதுவாக போதுமான இடவசதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, உணவு, உடை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மருந்துகள், மாத்திரைகள் மற்றும் அவசர தேவைக்கு அவசர ஆம்புலன்ஸ் ஆகியவை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை உள்ளிட்ட வார்டுகளில், தடையற்ற மின்சாரம் உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பேரிடர் தொடர்பான தகவல்களை, பொதுமக்கள் உடனுக்குடன் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண், 1077 மூலம், 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம்.மேலும், பொதுமக்கள், 'டிஎன்ஸ்மார்ட்' என்ற அப்ளிகேஷனை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, மழை குறித்த பேரிடர் மேலாண் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., சுமன், தனித்துறை கலெக்டர் சுந்தரராஜன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி