நாமகிரிப்பேட்டையில் 2 வீடுகளில் 7 பவுன், ரூ.1.50 லட்சம் திருட்டு
ராசிபுரம்: நாமகிரிப்பேட்டையில் ஒரே பகுதியில் உள்ள, இரண்டு வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள், ஏழு பவுன் நகை, 1.50 லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர்.நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை, நாரைக்கிணறை சேர்ந்தவர் செந்தில், 38; சாலைப்பணிக்கு, ஒப்பந்த முறையில் வாகனங்களை இயக்கி வருகிறார். இவரது மகன் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இதனால், ராசிபுரம் அடுத்த எஸ்.ஆர்.வி., கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊரான நாரைக்கிணறுக்கு சென்றுவிட்டார். நேற்று மகனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டின் கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த, 1.5 லட்சம் ரூபாய் பணம், மூன்று பவுன் தங்க நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். எஸ்.ஐ., சுரேஷ் மற்றும் போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர். அப்போது, செந்தில் வீட்டின் அருகே உள்ள ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அனில்குமார், 40, என்பவரின் வீட்டிலும் திருடு போயிருந்தது தெரிந்தது.அனில்குமார், தனியார் பள்ளியில், 'நீட்' தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இங்கு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். திருடு போன, நேற்று முன்தினம் இரவு அனில்குமார் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அருகில் இருந்த, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தபோது, செந்தில் வீட்டில் திருடிய திருடர்கள், அனில்குமார் வீட்டையும் நோட்டமிட்டுள்ளனர். ஜன்னல் திறந்திருந்ததால் அங்கே சென்று பார்த்துள்ளனர். அப்போது, ஜன்னல் ஓரத்தில் டேபிளில் இருந்த, நான்கு பவுன் தங்க நகையை திருடி சென்றது தெரியவந்தது. இருவர் வீட்டிலும், ஏழு பவுன் தங்க நகை, 1.50 லட்சம் ரூபாய் திருடு போயிருந்தது தெரிந்தது.