லிப்டில் சிக்கிய நோயாளியால் நாமக்கல் ஜி.ஹெச்.,ல் பரபரப்பு
நாமக்கல்: லிப்டில் சிக்கி கொண்ட நோயாளி, 2 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டார். இச்சம்பவம், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.நாமக்கல் அடுத்த வேப்பநத்தம்புதுாரை சேர்ந்தவர் கண்ணன், 70. இவர், கடந்த, 9 நாட்களாக, சிறுநீரக பிரச்னை காரணமாக, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 5-வது மாடியில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம், 2:15 மணிக்கு, மருத்துவ அறிக்கை வாங்குவதற்காக, தரை தளத்திற்கு வந்துள்ளார். அறிக்கையை வாங்கிக்கொண்டு, 5வது மாடிக்கு செல்வதற்காக, லிப்டில் சென்றார்.அப்போது, 3வது மாடியில் சென்று கொண்டிருந்தபோது லிப்ட் பழுதாகி நின்று விட்டது. இதனால், 2:00 மணி நேரம் லிப்டில் தவித்தார். இதுகுறித்து மருத்துவ பணியாளர்கள், லிப்ட் பராமரிப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த பராமரிப்பாளர்கள், பழுதை சரிசெய்து, இரண்டு மணிநேரத்திற்கு பின், நோயாளி கண்ணனை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம், நேற்று அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.