ஐப்பசி முதல் ஞாயிறையொட்டி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்
நாமக்கல்: நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி, நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்பு மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறும்.அதன்படி, ஐப்பசி முதல் ஞாயிறான நேற்று காலை, 10:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தப்பட்டது. தொடர்ந்து, 11:00 மணிக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், வெண்ணெய், தேன், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.