லாட்டரி கடை, போதை பொருள் புழக்கத்தை ஒழிக்க அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் கோரிக்கை
குமாரபாளையம், குமாரபாளையம் நகர்மன்ற கூட்டத்தில், நகராட்சி கட்டடத்தில் மறைமுகமாக செயல்படும் லாட்டரி கடையை அகற்ற வேண்டும், போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என, அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். குமாரபாளையம் நகர்மன்ற கூட்டம், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் நடந்த விவாதம் பின்வருமாறு:பாலசுப்ரமணி, அ.தி.மு.க.,: குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சி கட்டடத்தில் லாட்டரி விற்பனை கன ஜோராக நடக்கிறது. சட்ட விரோத லாட்டரி விற்பனை, நகராட்சி கடையில் நடத்துவது சரியா? அதை உடனே அகற்ற வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கதிரவன், தி.மு.க.,: சுந்தரம் நகர் பள்ளி அருகே, போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிந்தராஜ், தி.மு.க.,: குள்ளங்காடு பகுதியில் கொட்டி வைக்கப்பட்ட குப்பைக்கு துாய்மை பணியாளர்கள் தீ வைத்ததால், அருகே இருந்த யோகா மையம், வீடு, டூவீலர்கள் தீப்பற்றி எரிந்தன. குப்பையை துாய்மை பணியாளர்கள் அகற்றுவதில்லை. கேட்டால் வண்டி இல்லை என்கின்றனர். இதனால், ஓரிடத்தில் குப்பைகளை சேகரித்து, தீ வைப்பதால் இதுபோன்ற விபத்து ஏற்படுகிறது. குப்பையை சேகரித்து கொட்ட இடம் ஏற்பாடு செய்ய வேண்டும். விஜய்கண்ணன், நகராட்சி தலைவர்: குப்பை கொட்டுவதற்கு ஏற்ற இடம் உள்ளது. ஆனால் அங்கு செல்ல வழிதான் இல்லை. அதற்கு, அ.தி.மு.க., கவுன்சிலர் புருசோத்தமன் மனசு வைத்தால் தான் உண்டு. நகராட்சி வணிக வளாகத்தில் லாட்டரி விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பள்ளி, கல்லுாரி அருகே போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.