நைனாமலை குவலயவல்லி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை அன்னதானம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை-சேந்தமங்கலம் இடைப்பட்ட பகுதியான நைனாமலையில், பிரசித்தி பெற்ற 12-ம் நுாற்றாண்டை சேர்ந்த ஆதி திருப்பதி என மக்களால் அழைக்கக்கூடியதும், 3,600 செங்குத்தான படிகள் கொண்டு, 3 கி.மீ., உயரத்தில் வீற்றிருக்க கூடிய குவலயவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மலையின் மீது அமர்ந்துள்ள குவலயவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாளை தரிசித்து செல்வர்.ஆலயத்து வெளியில் இருக்கும் பழமையான கல்மண்டப துாண்களில் ஜடாமுடி சித்தர், பிராண தீபிகை சித்தர், குருலிங்க சித்தர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள இறைவனை சூரியன் வழிபட்டு வரம் பெற்றதாக கூறப்படுகிறது. பெருமை வாய்ந்த கோவிலின் அடிவாரத்தில் மார்கழி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நாளை (20ம் தேதி), ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக, 1,000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.இதுவரை, 20க்கும் மேற்பட்ட முக்கிய திருத்தலங்களில் சிறப்பு வாய்ந்த நாட்களில் அன்னதானம் வழங்கி வருகின்றனர். நைனாமலையில் கடந்த, 5 மாதங்களாக தமிழ் மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் அன்னதானம் நிகழ்வு சிறப்புடன் நடந்தது. தொடர்ந்து ஆண்டாளுக்கு உகந்த மாதமான, மார்கழி மாத முதல் சனிக்கிழமையும் நடைபெறவுள்ளது என்பதை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக தெரிவிக்கப்படுகிறது. பிரதி தமிழ் மாதம் முதல் சனிக்கிழமையில், அன்னதானம் வழங்கப்படும் எனவும், இதில் மக்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என, ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை கேட்டுக்கொள்கிறது.