தற்காலிக தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில், வெடிபொருள் சட்டம்-1884 மற்றும் வெடிபொருள் விதிகள்-2008-ன் கீழ் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர், உரிய நிபந்தனைகளை பின்பற்றி இணையதளம் வழியாக அக்.,11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.பட்டாசு கடை அமைக்க விரும்புவோர், அனைத்து பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்துடன், விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, அடையாள அட்டை (வருமான வரி நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ்), உரிம கட்டணம், 600 -ரூபாயை அரசு கருவூல செலுத்துச் சீட்டு மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய செலுத்துச்சீட்டு (அசல்), பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்தக் கட்டடம் எனில் மனுதாரர் பெயரில் உள்ள பட்டா (அல்லது) வாடகை கட்டடம் எனில் வாடகை ஒப்பந்தப்பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதிமொழிப் பத்திரம், கட்டட அமைவிட வரைபடம் (அல்லது) கட்டட திட்ட அனுமதி ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விபத்து இல்லாத மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையை கொண்டாட மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.