தமிழக அரசை கண்டித்து பகுஜன் சமாஜ் ஆர்ப்பாட்டம்
ராசிபுரம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை, சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்காத தமிழக அரசை கண்டித்து, பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம் செய்தது.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், சி.பி.ஐ.,க்கு மாற்றிய பின்பும், வழக்கின் ஆவணங்களை ஒப்படைக்காமல் நீதிமன்றத்தை தமிழக அரசு அவமதிப்பு செய்து வருதாக கூறி, மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராசிபுரத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அஜித்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பகத்சிங், மாவட்ட இணை செயலாளர் பூவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.