உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வீட்டின் முன்புறம் இடையூறாக வைக்கப்பட்ட பேனர்; உயர்நீதிமன்ற உத்தரவின்படி அகற்றம்

வீட்டின் முன்புறம் இடையூறாக வைக்கப்பட்ட பேனர்; உயர்நீதிமன்ற உத்தரவின்படி அகற்றம்

ராசிபுரம், ராசிபுரம் அருகே, வீட்டின் முன்புறம் இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனரை, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், கூனவேலம்பட்டிபுதுாரை சேர்ந்தவர் காயத்திரி, 35. இவர், தோனமேடு பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறி, பலமுறை போராட்டம் நடத்தினர். பின்னர், காயத்திரி வீட்டின் முன்புறம், 10 அடி உயரம், 20 அடி நீளத்திற்கு பேனர் மற்றும் அந்த பகுதியில் உட்கார கற்களை அமைத்துள்ளனர். இதனால், காயத்திரி வீட்டிற்கு சென்று வர சிரமம் ஏற்பட்டது. மேலும் அவருடைய கட்டடத்தில் உள்ள கடைக்கு யாரும் வாடகைக்கு வரவில்லை. இதனால், விரக்தியடைந்த காயத்திரி, ஊர் மக்களிடம் பேசி பார்த்தார். யாரும் பேனரை அகற்றவில்லை.இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் காயத்திரி மனுதாக்கல் செய்தார். அதில், வீட்டிற்கு முன்புறம் பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரை அகற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். கடந்தாண்டு மே மாதம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்குள் அப்பகுதியில் உள்ளவர்கள், கருப்பனார் கோவில் ஒன்றையும் கட்டி விட்டனர். இந்நிலையில் நேற்று காலை, தாசில்தார் சசிக்குமார் மற்றும் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்துறை அதிகாரிகள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, பேனர், உட்கார போட்டிருந்த கற்களை அகற்றினர். மேலும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள, கருப்பனார் கோவிலை அகற்றுவதற்காக அதிகாரிகள் சென்றனர்.பெண்கள், பொதுமக்கள் கோவில் முன் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய தயாராகினர். தாசில்தார் சசிக்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து கோவில் அகற்றுவதை அதிகாரிகள் நிறுத்தினர். மேலும், கைது செய்தவர்களை விடுதலை செய்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் நேற்று காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை