சாலை விரிவாக்கத்திற்காக பெட்டி பாலம் அமைப்பு
எருமப்பட்டி: நாமக்கல் - துறையூர் சாலை, எருமப்பட்டியில் இருந்து ரெட்டிப்பட்டி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால், நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை விரிவாக்கம் செய்ய அரசிடம் இருந்து நிர்வாக அங்கீகாரம் கடந்தாண்டு பெறப்பட்டது. அதை தொடர்ந்து, முதல் கட்டமாக, 9.2 கிலோ மீட்டர் துாரத்திற்கு, 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளைவுகள் இல்லாத சாலை அமைக்கும் பணிக்கான முன்னேற்பாடு பணிகள், கடந்த, நான்கு மாதத்திற்கு முன் துவங்கியது. இப்பணிகள் தற்போது முடிந்துள்ளதால், முதல் கட்டமாக பாலங்கள் கட்டப்படும் இடங்களில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்ட நிலையில், தற்போது மழைநீர் செல்லும் வழிகளில் தண்ணீர் செல்வதற்காக பெட்டி பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''நாமக்கல் - துறையூர் சாலை விரிவாக்கம் பணி துவக்கப்பட்டுள்ளது. இதில், துாசூரில் பாலம் விரிவுபடுத்த சர்வீஸ் சாலையும், கைகாட்டி அருகே மழைநீர் செல்லும் வழியில், சாலைக்கு அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டிருந்த இடத்தில் பெட்டி பாலம் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது,'' என்றார்.