மேலும் செய்திகள்
பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி
07-Apr-2025
ராசிபுரம்:ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உழவர் சந்தை மற்றும் வாரச்சந்தை ஆகியவை உள்ளன. செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. முக்கியமாக மாலை நேரத்தில், அலுவலகம் முடியும் நேரத்தில் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். அதேசமயம், மதியத்திற்கு மேல் சந்தை கடைகளும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, பழைய பஸ் ஸ்டாண்ட் வரை வந்து விடுகிறது. சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களையும் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி செல்கின்றனர். இதனால், பஸ் ஸ்டாண்டில், 50 சதவீதத்தை கடைகளும், 20 சதவீதத்தை வாகனங்களும் ஆக்கிரமித்து கொள்கின்றன.சந்தை கடைகளை சந்தைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் வைக்க வேண்டும் என, நகராட்சி பலமுறை அறிவுறுத்தியும் யாரும் கண்டுக்கொள்வதே இல்லை. பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்து கொள்வதால், பஸ்கள் கூட உள்ளே வர மிகவும் சிரமப்படுகின்றன. அதேபோல், பயணிகளும் பஸ்சுக்கு காத்திருக்க முடியாமல் தவிக்கின்றனர். சந்தையால் மெதுவாக வரும் டவுன் பஸ்கள், நேரம் இல்லாத காரணத்தால் உடனே புறப்பட வேண்டியதாகி விடுகிறது. இதனால், பயணிகள் அடித்துபிடித்து பஸ்சில் ஏறுகின்றனர்.அதேபோல், சந்தைக்கு வரும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக உள்ளே வருவதால், வயதானவர்கள், குழந்தைகள் பஸ் ஸ்டாண்டிற்குள் நடக்கவே சிரமப்படுகின்றனர். எனவே சந்தை இடத்தில் மட்டும் கடை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
07-Apr-2025