| ADDED : ஏப் 03, 2024 06:11 PM
நாமக்கல்: நாமக்கல்லில், நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கி உள்ளது. அவற்றை எண்ணும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். ரூ. 4 கோடி பணம் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி பணப் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுசெல்லப்படும் பணம், பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9ftxulhj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில் சில இடங்களில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபற்றி அவர்கள் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (ஏப்.,2) சென்னையில் 5 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் தனியார் பஸ் உரிமையாளரான சந்திரசேகர் என்பவர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று( ஏப்.,03) சோதனை மேற்கொண்டனர். இவர் பிரபல அரசியல் கட்சிக்கு நெருக்கமானவர் எனக்கூறப்படும் நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. இச்சோதனையில் அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.4 கோடி வரை பணம் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கைபற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.சென்னையில்
ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவரின் வீடு, புரசைவாக்கம் கொண்டித்தோப்பு, கொரட்டூர் பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களின் வீடுகள் என 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.இதில் தொழில் அதிபர்களின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கொரட்டூரில் மட்டும் ரூ.2.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் என்பது தெரிய வந்துள்ளது.