| ADDED : ஜூன் 16, 2024 06:42 AM
எலச்சிபாளையம் : திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த மதன்குமார், உதயதாட்சாயினி ஆகிய இருவரும், கடந்த, 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள், பதிவுத்துறை அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்வதற்காக சென்றபோது, பந்தல்ராஜா என்ற கும்பல் பதிவு செய்யக்கூடாது என தடுத்துள்ளனர். இந்நிலையில், மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில் காதல் ஜோடிகள் தஞ்சமடைந்தனர். இதையறிந்த சிலர், அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்கள் மீதும், அலுவலகத்தில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி, காதல் ஜோடிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இச்செயலை கண்டித்தும், காதல் திருமணம் செய்த ஜோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என, வலியுறுத்தி, நேற்று மாலை, எலச்சிபாளையம் பஸ் ஸ்டாப்பில், மா.கம்யூ., மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், ஒன்றிய செயலாளர் சுரேஷ், மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் மோட்டார் சங்க பொருளாளர் சத்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.