தேர்வு விடுமுறையில் என்.எஸ்.எஸ்., முகாம் நடத்த சி.இ.ஓ., அறிவுரை
நாமக்கல், என்.எஸ்.எஸ்., முகாம் குறித்த முன் திட்டமிடல் கூட்டம், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.ஏ., கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்து பேசியதாவது:பள்ளிக்கல்வித்துறை சார்பில், காலாண்டு தேர்வு விடுமுறையில், நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம், 55 மேல்நிலை பள்ளிகளில் நடக்க உள்ளது. இதில் பிளஸ் 1 மாணவ, மாணவியர், ஏழு நாட்கள் அவர்கள் தத்தெடுக்கும் கிராமத்தில், என்.எஸ்.எஸ்., பணிகளை மேற்கொள்ள உள்ளனர். முகாமில், மாணவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வசதி, சுகாதாரமான உணவு, தங்குவதற்கு இடம் ஆகியவற்றை, தலைமையாசிரியர்கள் செய்து தர வேண்டும்.உடல்நலம் சார்ந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவத்துறையோடு இணைந்து திட்டமிட்டு நடத்த வேண்டும். மரக்கன்றுகள், விதை நடுதல், சுற்றுப்புற துாய்மை செயல்பாடு, திடக்கழிவு மேலாண்மை, மண் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, துாய்மையான குடிநீர், சரிவிகித உணவு, எய்ட்ஸ் விழிப்புணர்வு உயர் கல்வி வழிகாட்டு நிகழ்வுஉள்ளிட்ட செயல்பாடுகள் சிறப்பு முகாமில் அவசியம் இடம்பெற வேண்டும். கூட்டத்தில் மாவட்ட என்.எஸ்.எஸ்., திட்ட தொடர்பு அலுவலர் ராமு, பள்ளித்துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.