முதல்வர் கோப்பை செஸ், கேரம் விளையாட்டு அரசு ஊழியர்கள் 100 பேர் பங்கேற்று அசத்தல்
நாமக்கல்: முதல்வர் கோப்பைக்கான, அரசு ஊழியர்களுக்கு நடந்த செஸ், கேரம் போட்டியில், மாவட்டம் முழுதும் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு முதல்வர் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டி, கடந்த, 10ல் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சிவகங்கை மாவட்டத்தில் துவக்கி வைத்தார்.நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டிகள், பொதுப்பிரிவினர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி என, 5 பிரிவுகளில், 15 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.இப்போட்டிகளில், நாமக்கல் மாவட்டத்தில், 31,566 பேர் பங்கேற்கின்றனர். இறகுபந்து, கால்பந்து, கபடி, நீச்சல், சிலம்பம், செஸ், கேரம், தடகளம், ஹாக்கி, கிரிக்கெட், கைப்பந்து, மேசைப்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து உள்ளிட்ட போட்டிகள், நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் நடக்கிறது.இந்நிலையில், மாவட்ட விளையாட்டு மைதானத்தில், அரசு ஊழியர்களுக்கான செஸ் மற்றும் கேரம் போட்டி நடத்தப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, போட்டியை துவக்கி வைத்தார். அதில், பங்கேற்ற அரசு ஊழியர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். விளையாட்டில், மாவட்டம் முழுதும் இருந்து, 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். முதல்வர் கோப்பைக்கான தடகளம், விளையாட்டு போட்டிகள் இன்று முடிவடைகிறது.