மேலும் செய்திகள்
வல்வில் ஓரி விழா; எஸ்.பி., ஆய்வு
30-Jul-2025
நாமக்கல்: வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நடந்த வில்வித்தை போட்டியில், கோவையை சேர்ந்த வீரர், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தார்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை வல்வில் ஓரி ஆண்டு வந்தார். வில் வித்தைகளில் சிறந்தவர் ஓரி. இவர், காட்டுக்கு வேட்டையாட சென்றபோது, வலிமையான புலி ஒன்று, பெரிய யானையை வீழ்த்தப்பார்த்தது. அதைக்கண்ட ஓரி, தன் கூரிய அம்பை எடுத்து யானையை குறிவைத்து எய்தான். அம்பு யானையை வீழ்த்தி, பின் அருகில் இருந்த புலியின் வாய்வழியே உடலை துளைத்து, வழியில் நின்ற மானை மடிய செய்து, காட்டுப்பன்றியின் உயிரைப்பறித்து, இறுதியில் புற்றொன்றில் அடைந்து கிடந்த உடும்பின் உடலை தைத்தது.இந்த வில் திறனை வன்பரணர் புகழ்ந்து பாடியுள்ளார். ஐந்து உயிரினை கொல்லும் அம்பு விடும் வில்திறன் வல்வில் ஓரிக்கு மட்டுமே வாய்த்திருந்தது. அவரது வீரத்தையும், தீரத்தையும் பறைசாற்றும் வகையில், ஆண்டுதோறும், வல்வில் ஓரி விழா முன்னிட்டு, வில்வித்தை போட்டி நடத்தப்படுகிறது.அதன்படி, வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, கொல்லிமலையில் வில்வித்தை போட்டி நேற்று நடந்தது. அதில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த, 140 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டி, 10, 14, 17 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் ஓப்பன் கேட்டகிரி என, நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்டது. அதேபோல், இந்தியன் வில், ரீகர்வ் வில், காம்பவுண்ட் வில் என, மூன்று பிரிவுகளிலும் நடத்தப்பட்டது.அதில், இந்தியன் வில் பிரிவில், கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஆர்ச்சரி சங்கத்தை சேர்ந்த ராஜராஜேஸ்வரா, ரீகர்வ்வில் பிரிவில், புதுச்சேரி மாநிலம், காரைக்கால் ஆர்ச்சரி அகாடமியை சேர்ந்த சாய் கவின் குமரன், காம்பவுண்ட் வில் பிரிவில், கோவை, நேஷனல் ஆர்ச்சரி அகாடமியை சேர்ந்த சரணவ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.மேலும், கோவை எல்லோ டிரைன் ஸ்கூலை சேர்ந்த நக்ஷத் ஆதர்வா, நடப்பு ஆண்டில், வல்வில் ஓரி சாம்பியன் கோப்பையை வென்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
30-Jul-2025