உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

நாமக்கல், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அன்னை தமிழுக்கு பணியாற்றி வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாதந்தோறும், 7,500 ரூபாய், மருத்துவப்படி, 500 ரூபாய் என மொத்தம், 8,000 ரூபாய் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். அரசு பஸ்களில் கட்டணமில்லா பயணச் சலுகையும் வழங்கப்படும். தமிழறிஞர்கள் மறைவுக்கு பின் அவர்களின் மனைவி அல்லது திருமணமாகாத மகள், விதவை மகளுக்கு வாழ்நாள் முழுவதும், 3,000 ரூபாய் வழங்கப்படும்.மகளிர் உரிமைத்தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழக அரசின் வேறு திட்டங்கள் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்றுவரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரர்களுக்கு, 2025 ஜன., 1ல், 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய், 1,20,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும். வருமான சான்றிதழ் இணைக்க வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரை சான்று, இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாரிசு சான்று இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும். உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்ப படிவத்தை மண்டல, மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை அல்லது உதவி இயக்குனர் அலுவலகத்திலேயே நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்திலோ கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரிலோ அல்லது tamilvalarchithurai.org/agavai/ என்ற வலைதளம் வாயிலாகவும் நவ., 17க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ