உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்க கல்லுாரி களப்பயணம்
நாமக்கல்,நாமக்கல்லில், பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லுாரி களப்பயணத்தை, கலெக்டர் துர்கா மூர்த்தி துவக்கி வைத்தார்.நாமக்கல் மாவட்டத்தில், உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், 2025-26ம் கல்வியாண்டில், அரசு மேல்நிலை பள்ளியில், பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு, உயர்கல்வியில் ஆர்வமூட்டும் வகையில், கல்லுாரி களப்பயண செயல்பாடுகள் பள்ளிக்கல்வித்துறை நடத்தப்படுகிறது.இதையொட்டி, நேற்று, 88 அரசு பள்ளிகளில் இருந்து, 4,642 மாணவர்கள் மருத்துவ கல்லுாரி, கால்நடை மருத்துவ கல்லுாரி, கலை அறிவியல் கல்லுாரி, சட்ட கல்லுாரி, துணை செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் பி.எட்., கல்லுாரி போன்ற, 20 கல்லுாரிகளுக்கு களப்பயணமாக அழைத்து செல்லப்பட்டனர். பஸ்கள் மூலம் புறப்பட்டு சென்ற மாணவர்களை, கலெக்டர் துர்கா மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.மாணவர்கள், தங்கள் களப்பயணத்தின்போது கல்லுாரியின் வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள், ஆய்வகங்கள், நுாலகம், விடுதி அறைகள் மற்றும் உணவு கூடம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.இக்களப்பயணத்தின் மூலம், மாணவர்கள் கல்லுாரிகளுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கல்லுாரியில் உள்ள இளங்கலை படிப்பு, உதவித்தொகை திட்டங்கள், போட்டி தேர்வுகள், வேலை வாய்ப்புகள், கல்லுாரியில் நடக்கும் கல்வி சாரா நிகழ்வுகள், கலாசார கொண்டாட்டங்கள், விளையாட்டு வசதிகள். கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், சான்றிதழ் படிப்புகள், கூடுதல் பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் போன்றவற்றை அறிந்துகொள்ள ஏதுவாக அமைந்துள்ளது.மேலும், உயர்கல்வியில் சேர்ந்து பயில மாணவர்களை ஊக்குவிக்கவும், கல்லுாரிகள் குறித்து மாணவர்களுக்கு உள்ள பயத்தை நீக்குவதற்கும், தங்களுடைய எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள தேவையான வழிகாட்டுதலை பெறவும், இக்களப்பயணம் உதவியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.