உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பள்ளி நிலம் போலி ஆவணம் மூலம் முறைகேடு நடவடிக்கை எடுக்க கோரி இ.ஓ.,விடம் புகார்

பள்ளி நிலம் போலி ஆவணம் மூலம் முறைகேடு நடவடிக்கை எடுக்க கோரி இ.ஓ.,விடம் புகார்

ராசிபுரம், ராசிபுரம் அருகே, பள்ளி நிலத்தை போலி ஆவணம் மூலம் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஆர்.டி.ஓ., உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லுார் டவுன் பஞ்., குருசாமிபாளையத்தில், செங்குந்தர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் பாதையை, அதன் அருகே உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சாதகமாக டவுன் பஞ்., நிர்வாகம் ஒதுக்கி தந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவலறிந்த பள்ளி தாளாளர் அர்த்தனாரி, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆவணங்களை வாங்கி சரிபார்த்துள்ளார். அதில், பள்ளி செயலாளர் தடையில்லா சான்று கொடுத்த கடிதம், டவுன் பஞ்., தலைவர் சுப்ரமணி கொடுத்த பரிந்துரை கடிதம், சாலை வேண்டும் என கொடுத்துள்ள விண்ணப்பம் ஆகிய அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், போலியாக தயார் செய்த கடிதங்களை வைத்து, கடந்த பிப்., 27ல் ஆர்.டி.ஓ.,வுக்கு மனு செய்து குறிப்பிட்ட நிலத்தை பொது பயன்பாடு பாதையாக மாற்றியது தெரியவந்தது.அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு, ஆர்.டி.ஓ., அளித்த ஆணையை திரும்ப பெற வலியுறுத்தியும், போலி கடிதம் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், நேற்று டவுன் பஞ்., செயல் அலுவலர் பிரபாகரனிடம் மனு கொடுத்தனர்.இதுகுறித்து, செயல் அலுவலர் பிரபாகரனிடம் கேட்டபோது, ''குறிப்பிட்ட பாதை பஞ்சாயத்தால் சாலை அமைக்கப்பட்டு, கடந்த, 25 ஆண்டுகளாக பொதுமக்கள் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலத்தை தான் ஆர்.டி.ஓ., வகைப்பாடு செய்துள்ளார். போலி மனு, கடிதங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை