மா.திறனாளி வாக்காளர்களுக்கு வசதியாக சக்ஸாம் மொபைல் செயலி உருவாக்கம்
நாமக்கல்,''மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கென, 'சக்ஸாம்' என்ற மொபைல் செயலி, இந்திய தேர்தல் ஆணையம் பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது,'' என, நாமக்கல் கலெக்டர் உமா பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் இலகுவாக அணுகக்கூடிய தேர்தலுக்கான, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியலில், தற்போது வரை, 14,243 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்கள் இலகுவாக அணுகக்கூடிய, தேர்தலுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் சேர்க்காத மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டு சேர்ப்பதை எளிதாக்குவதை உறுதி செய்ய வேண்டும். எளிதில் அணுகக்கூடிய ஓட்டுச்சாவடி மற்றும் ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து, ஓட்டுகளை பதிவு செய்வதற்கு தடையற்ற சூழலை உருவாக்க வேண்டும்.இந்திய தேர்தல் ஆணையம், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கென, 'சக்ஸாம்' என்ற மொபைல் செயலியை பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது. இச்செயலியில், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்தல், பதிவை இடமாற்றம் செய்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் இலகுவாக தேர்தலை அணுகுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, கல்வி அலுவலர் கற்பகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.