ஆபத்தான இலவம் பஞ்சு மரம் வனத்துறை அனுமதியுடன் அகற்றம்
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட மாதாபுரம் பகுதியில் இலவம் பஞ்சு மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் மிக உயரமாக வளர்ந்துள்ளதால், அவ்வப்போது காற்றுக்கு அதன் கிளைகள் முறிந்து விழுந்து வந்தன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்த மரங்களை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள், நகராட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட நிர்வாகம், வனத்துறையினரிடம் முறையான அனுமதி பெற்றது. இதனால், நேற்று, நகராட்சி நிர்வாகம் மூலம் பாதுகாப்பாக இலவம் பஞ்சு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன், கமிஷனர் தயாளன், நகராட்சி பொறியாளர் ரேணுகா ஆகியோர் ஆய்வு செய்தனர். அகற்றப்படும் மரங்களுக்கு இணையாக, உயரம் குறைவாக வளரும் மரக்கன்றுகள் விரைவில் வைக்கப்படும் என, நகராட்சி தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.