உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவசாய பயிர் கடன் உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த கோரிக்கை

விவசாய பயிர் கடன் உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த கோரிக்கை

நாமக்கல், தமிழகத்தில், விவசாயிகளுக்கு பயிர் கடன் உச்சவரம்பை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: மேட்டூர் அணையில் இருந்து, ஜூன் 12ம் தேதி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக, தமிழக முதல்வர் உரிய நேரத்தில், நேரில் வந்து தண்ணீர் திறந்து வைத்தார். இதை விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. காவிரி டெல்டா பாசனத்திற்கு தேவையான காவிரி நீரை, தினந்தோறும் விகிதாச்சார அடிப்படையில், கர்நாடக அரசிடம், கூட்டணி பாரபட்சம் பார்க்காமல், தமிழகத்தில் உண்டான உரிமை நீரை பெற்றுத்தர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா விவசாயிகள், குறுவை நெல் சாகுபடி செய்ய தங்குதடையின்றி கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில், தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் உச்சவரம்பு, 3 லட்சம் ரூபாய் மட்டும் தான் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் விவசாயிகள் பயிர் செய்ய, மூலதன செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி, பயிர் கடன் உச்சவரம்பை, 3 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக அதிகரித்து வழங்க முதல்வர் உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை