உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் துணை முதல்வர் உதயநிதி பேச்சு

மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் துணை முதல்வர் உதயநிதி பேச்சு

நாமக்கல், ''மக்களுடைய கோரிக்கை மனுக்களுக்கு, கூடுமானவரை தீர்வு பெற்றுத் தர வேண்டும்,'' என, நாமக்கல்லில் நடந்த ஆய்வு கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி பேசினார். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட பணிகள், வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து, துறைவாரியாக துணை முதல்வர் உதய நிதி ஆய்வு செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:விளையாட்டு உபகரணங்கள் மாணவ, மாணவியர், விளையாட்டு வீரர்களுக்கு முறையாக வழங்கப்பட்டு திரும்ப பெறப்படுகிறதா, அதற்கான பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டத்தில் மூன்று தொகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள, முதல்வர் சிறு விளையாட்டு அரங்கப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டதற்கு இணங்க, முதல்வர் பல்வேறு முத்திரை திட்டங்களுக்கு அனுமதியும், நிதியும் வழங்கி உள்ளார். பணி முன்னேற்றம் குறித்து, குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்து, குறித்த காலத்திற்குள் பணிகளை முடித்து, அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.மக்களுடைய கோரிக்கை மனுக்களுக்கு, கூடுமானவரை தீர்வு பெற்றுத் தரவேண்டும். தீர்வுகாண முடியாத மனுக்களுக்கு, அந்த மனு அளித்தவருக்கு உரிய காரணத்தை எளிமையாக புரியும்படி விளக்கி கூற வேண்டும். அரசின் மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் நம்பிக்கை வைத்து தான் மக்கள் மனுக்களை அளிக்கின்றனர். அதை மனதில் வைத்து, மனுக்களை அணுக வேண்டும். இது குறித்து ஆய்வு செய்து, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு, கலெக்டர் அறிக்கை அளிக்க வேண்டும்.'உங்களுடன் முதல்வர்' முகாம்களை, முதல்வர் ஸ்டாலின் வரும், 15ல், துவங்க உள்ளார். அந்த முகாம்களில், குறிப்பாக மகளிர் உரிமைத் திட்ட மனுக்கள் அதிகளவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியுள்ள அனைவரும் பயன்பெறும் வகையில், மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும். சாலை, குடிநீர், மின் இணைப்பு போன்ற அடிப்படை தேவைகளை வழங்குவதில் உள்ள குறைபாடுகள் குறித்து வரும் புகார் மனுக்களை, தாமதப்படுத்தாமல் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மக்கள் பணியில் ஆர்வமுள்ள மக்கள் பிரதிநிதிகள், இம்மாவட்டத்தில் அதிகமாக உள்ளனர். அவர்களுடைய முயற்சியால், முதல்வர் முக்கியமான திட்டங்களை நாமக்கல் மாவட்டத்திற்கு வழங்கி இருக்கிறார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. நிலுவையிலுள்ள அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து, இந்த அரசுக்கும், மக்களுக்கும் இடையில் பாலமாக இருந்து, அரசுக்கும், முதல்வருக்கும் நல்ல பெயரை பெற்றுத்தர, அரசு அலுவலர்களாகிய உங்களை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு பேசினார்.சுற்றுலாத் துறை அமைச்சர் -ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், பிரகாஷ், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசமி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், கூடுதல் செயலாளர் உமா, கலெக்டர் துர்கா மூர்த்தி, மாநகராட்சி மேயர் கலாநிதி. துணை மேயர் பூபதி, எஸ்.பி., ராஜேஸ் கண்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி