சின்ன வெங்காய பயிரில் நோய் தாக்கம் விதை நேர்த்தி செய்து நடவு செய்ய டிப்ஸ்
சின்ன வெங்காய பயிரில் நோய் தாக்கம்விதை நேர்த்தி செய்து நடவு செய்ய 'டிப்ஸ்'நாமக்கல், நவ. 20-'சின்ன வெங்காய பயிரில் நோய் தாக்காமல் இருக்க, விதை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி யோசனை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், சிறப்பு, ரபி பருவத்தில், மோகனுார், எருமப்பட்டி, புதுச்சத்திரம், மல்லசமுத்திரம், வெண்ணந்துார், ராசிபுரம் வட்டாரங்களில், அதிகளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, மிதமான வெப்பநிலை, தொடர் மழைச்சாரல், பனிப்பொழிவு, ஈரப்பதம், காற்றோட்டமின்மை போன்ற காரணங்களால், சின்ன வெங்காய பயிரில் கோழிக்கால் திருகல் நோய், தவளை நோய், இலைப்பேன், நுனிக்கருகல், வெட்டுப்புழு, ஊதா கொப்புள நோய் போன்ற நோய்களின் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அதனால், சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகள், நடவு செய்யும் விதை வெங்காயத்தை, விதை நேர்த்தி செய்த பின் நடவு செய்ய வேண்டும்.அதாவது, இயற்கை முறையில், 'டிரைகோடெர்மா ஹார்ஸியானம்' என்ற இயற்கை பூஞ்சானத்தை, ஒரு கிலோ விதை வெங்காயத்திற்கு, நான்கு கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து நடவு செய்யலாம்.அல்லது ரசாயன முறையில், 'கார்பன்டாசிம்' அல்லது 'மேங்கோசப்' என்ற மருந்தை ஹெக்டேருக்கு தேவையான விதை வெங்காயத்துடன், 500 கிராம் கலந்து, 20-25 நிமிடம் வரை நிழலில் உலர்த்தி பின் விதைக்கலாம்.பூச்சி, நோய் தாக்கம் தென்படும்போது, ரசாயன முறையில் பிப்ரோனில், 15.25 மி., அல்லது தையோ மீத்தாக்ஸோம், 20 மி., இவற்றில், ஏதாவது ஒன்றை, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.