திருமண மண்டபம், ஓட்டல் அரங்கங்களில் கண்காட்சி நடத்த அனுமதிக்க வேண்டாம்
நாமக்கல், திருமண மண்டபங்கள், ஓட்டல் அரங்கங்களில் கண்காட்சிகள் நடத்த, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டாம் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில், நாமக்கல் நகர நகை வியாபாரிகள் சங்க தலைவர் கருமலை, செயலாளர் சிவசிதம்பரம் ஆகியோர் கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மாவட்டத்தில், முறையாக அரசின் அனுமதி பெற்று, ஆயிரக்கணக்கான வணிகர்கள் வணிகம் செய்து வருகின்றனர். வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், திருமண மண்டபங்கள், ஓட்டல் அரங்கங்களில் வெளிமாவட்ட வியாபாரிகள் கண்காட்சி என்கிற பெயரில், தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.அதனால், உள்ளூர் வணிகர்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இது போன்ற தற்காலிக கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 'திருமண மண்டபங்களில் வணிக ரீதியாக எந்த ஒரு நிகழ்வும் நடத்த கூடாது' என, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அந்த உத்தரவின்படி, வரும் காலங்களில் திருமண மண்டபங்கள், ஓட்டல் அரங்கங்களில் கண்காட்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க கூடாது. மேலும், நகரில் காலிமனைகள் உள்ளிட்ட பல இடங்களில் கண்காட்சி என்ற பெயரில் அமைக்கப்படும் கடைகளுக்கு, உடனடியாக தடை விதித்து, உள்ளூர் வணிகர்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும், ஆயிரக்கணக்கான பணியாளர்களின் குடும்பங்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.