போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
நாமக்கல், நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி யூத் ரெட் கிராஸ் மற்றும் போதை பொருள் தடுப்புக் குழு சார்பில் நடந்த, போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபயணத்திற்கு, கல்லுாரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். ஏராளமான மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் நடைபயண பேரணியில் கலந்து கொண்டனர். கல்லுாரி நுழைவு வாயிலில் தொடங்கி, லத்துவாடி வரை சென்று, பின் மீண்டும் கல்லுாரி நுழைவு வாயிலில் பேரணி நிறைவடைந்தது.போதை பொருள் பயன்படுத்துவதால் நுரையீரல் புற்றுநோய், சுவாச கோளாறு, இருதய நோய், பக்கவாதம், உதடு, நாக்கு, தொண்டை புற்றுநோய் போன்ற பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும் மனநல பாதிப்பு, கவலை போன்ற பிரச்னைகளும் தோன்றுகின்றன. போதை பொருள் பயன்பாட்டின் விளைவாக வேலை இழப்பு, குடும்ப சிக்கல், குற்றச்செயல்களில் ஈடுபடுதல் போன்ற சமூக பிரச்னைகளும் உருவாகின்றன என்பதை வலியுறுத்தி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.கல்லுாரி விலங்கியல் துறை தலைவர் ராஜசேகர பாண்டியன், போதை பொருள் தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பார்வதி மற்றும் உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் செய்திருந்தார்.