ராசிபுரம்: ராசிபுரத்தில், 4 அடிக்கு வண்டல் மண் அள்ள அனுமதி பெற்று, 10 அடி ஆழத்துக்கு கிராவல் மண் வெட்டி கடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து, அப்பகுதியில் கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஓணாங்கரடு என்ற பகுதியில் ஈச்சங்குட்டை உள்ளது. இந்த குட்டையை ஒட்டியுள்ள, 2.5 ஏக்கர் நிலத்தில் விவசாயி குழந்தைவேல், 79, கடந்த, 60 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். குழந்தைவேலின் விவசாய நிலம் குட்டைக்கு சேர்ந்தது என, பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் ஓடை, குட்டை, ஏரிகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த வெட்டிக்கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்தது. இதை பயன்படுத்திக்கொண்ட உள்ளூர்வாசிகள், ஈச்சங்குட்டை மற்றும் அதை ஒட்டியுள்ள பிரச்னைக்குரிய விவசாய நிலத்தில், கடந்த, 28ல், 10 பொக்லைன் இயந்திரம், 22 டிராக்டர்கள் என, 32 வாகனங்கள் மூலம், காலை முதல் மாலை மண் வெட்டி அள்ளிச்சென்றனர். இதில், 10 அடி ஆழத்துக்கு விதிமுறை மீறி பள்ளம் தோண்டி கிராவல் மண் வெட்டி கடத்தியுள்ளனர். குட்டை, ஏரிகளில், 4 அடி உயரத்திற்கு மட்டுமே மண் வெட்டி எடுக்க வேண்டும். அதுவும் வண்டல் மண், களிமண்ணை மட்டுமே எடுக்க வேண்டும். ஆனால், ஈச்சங்குட்டையில், 10 அடி ஆழத்திற்கு கிராவல் மண்ணை வெட்டி கடத்தியுள்ளனர். இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் லோகநாதன் தலைமையில் அதிகாரிகள், நேற்று ஈச்சங்குட்டை பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, மண் வெட்டிய இடம், ஆழம், அகலம் உள்ளிட்டவற்றை அளந்து பார்த்தனர். உடன் சிங்களாந்தபுரம் வி.ஏ.ஓ., செந்தில்குமார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இதுகுறித்து கனிம வளத்துறையினர் கூறியதாவது: ஈச்சங்குட்டை பகுதியில் மண் வெட்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்துள்ளோம். எவ்வளவு மண் வெட்டப்பட்டுள்ளது என்பதை கணக்கிட்ட பின் தான் மேல் நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.