2 கோடி முட்டைகள் இறக்கும் பணி துவக்கம் முதல்வருக்கு பண்ணையாளர் சங்கம் பாராட்டு
நாமக்கல், டிச. 24-நாமக்கல் மண்டலத்தில் தினசரி, 5.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்திய அளவில், நாமக்கல் பகுதியில் இருந்து மட்டுமே அதிக அளவில் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஓமன் நாட்டில் தற்போது முட்டை இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், நாமக்கல்லில் இருந்து, 40 கன்டெய்னர்களில் கப்பலில் அனுப்பிய, 2 கோடி முட்டைகள், ஓமன் நாட்டின் துறைமுகத்தில் இறக்காமல் தேக்கமடைந்திருந்தன.கோழிப்பண்ணையாளர்களின் வேண்டுகோளை ஏற்று, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன் ஆகியோர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினர். அதை தொடர்ந்து, வெளியுறவுத்துறை மூலம், ஓமன் நாட்டின் துாதரக அதிகாரிகளிடம் பேசி, துறைமுகத்தில் தேங்கியிருந்த முட்டைகளை இறக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.இதையடுத்து, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. சங்க தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ், முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் வல்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முட்டை ஏற்றுமதியை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், நாமக்கல் கலெக்டர் உமா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.