ஓடையில் கொட்டப்படும் கட்டட கழிவுகள் அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
நாமகிரிப்பேட்டை :நாமகிரிப்பேட்டை அருகே, ஓடையில் கொட்டப்படும் கட்டட கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், தொப்பப்பட்டி ஊராட்சி பகுதியில் மழைநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையில் வரும் மழைநீர், அருகில் உள்ள ஏரி வரை செல்கிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் காலங்களில், ஓடை முழுவதும் தண்ணீர் செல்வதுடன் செக் டேம்களில் தேங்கி நிற்கும். நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் சுற்று வட்டார பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களுக்கும் உதவியாக இருக்கும். ஆனால், தற்போது ஓடையில் பழைய வீடுகளை இடித்த செங்கல், சிமென்ட் பூச்சுகள், கான்கிரீட் உள்ளிட்டவைகளை கொட்ட தொடங்கி உள்ளனர். தற்போது குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால், மழைநீர் தேங்கி நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஓடையில் உள்ள கட்டட கழிவு, குப்பைகளை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.