கொல்லிமலை அடிவாரம் வெள்ளம் 30 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு
எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், கொல்லிமலை அடிவாரமான பவித்திரம், நவலடிப்பட்டி, வரகூர் தோட்டமுடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, மிக கனமழை பெய்தது. இதேபோல், கொல்லிமலையில் பெய்த கன மழையால், நள்ளிரவில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால், தோட்டமுடையாம்பட்டி அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்தது. இந்த மழைநீரால் பயிரிடப்பட்டிருந்த, மரவள்ளி, வாழை, பாக்கு உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.இதேபோல், கடந்த, 40 நாட்களுக்கு முன் நடப்பட்டிருந்த மரவள்ளி செடிகளில் தண்ணீர் புகுந்ததால், துளிர்விட்டு வளர்ந்த, 20 ஏக்கர் மரவள்ளி கிழங்கு செடிகள் தண்ணீரில் மூழ்கி வீணாகின. இதேபோல், திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், 10 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை, பாக்கு மரங்கள், மண் அரிப்பு ஏற்பட்டு வேரோடு சாய்ந்த. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.