ஆக்ரோஷமான ஒற்றை யானை வனத்துறையினர் கண்காணிப்பு
ஓசூர், ஆக்ரோஷமாக சுற்றித்திரியும் ஒற்றை யானையால், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரகம், கர்நாடகா - தமிழக எல்லையில் அமைந்துள்ளது. இங்கு தற்போது, 100க்கும் மேற்பட்ட யானைகள் பல்வேறு குழுக்களாக முகாமிட்டுள்ளன. ஒற்றை யானைகளால், ஜவளகிரி வனத்தை ஒட்டிய கிராமங்களில், விவசாய பயிர்கள் சேதமாகி வருகின்றன. கடந்த இரு நாட்களுக்கு முன், ஜவளகிரி வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, ஜவளகிரி வனத்துறையினர் குடியிருப்பு அருகே இருந்த இரும்பு ரோப் வேலியை உடைத்து உள்ளே வர முயன்றது. கடும் ஆக்ரோஷமாக யானை பிளிறியபடி இருந்தது. அதன் ஆக்ரோஷத்தை படமெடுத்த நபர் ஓட்டம் பிடித்தார். கடைசி வரை ரோப்பை உடைத்து யானையால் வெளியே வர முடியவில்லை. இந்த யானை ஆக்ரோஷமாக இரும்பு ரோப்பை உடைக்க முயற்சிக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த யானை கடும் ஆக்ரோஷமாக வனத்தில் சுற்றித்திரிவதால், வனத்தை ஒட்டிய ஜவளகிரி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.