யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி; மதிப்பீட்டு தேர்வில் 133 பேர் ஆப்சென்ட்
நாமக்கல்: 'நான் முதல்வன்' திட்டத்தில், யு.பி.எஸ்.சி., தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு, இலவச பயிற்சிக்கான மதிப்பீட்டு தேர்வில், 240 தேர்வர்கள் பங்கேற்றனர். 133 பேர் கலந்து கொள்ளவில்லை.'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், போட்டித்தேர்வு பிரிவு, 2023ல் தொடங்கப்பட்டது. தமிழக இளைஞர்கள், மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித்தேர்வுகளில், சிறந்து விளங்க தேவையான உதவிகளை செய்வதையே முதன்மையான நோக்கமாக கொண்டு துவங்கப்பட்டது. இப்பிரிவானது, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு, தேவையான விரிவான பயிற்சி, திறன்கள், பிற உதவிகளை எளிதில் அணுகக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்துடன் இணைந்து, யு.பி.எஸ்.சி., தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு, இலவச பயிற்சியை வழங்கி வருகிறது.மேலும், இத்திட்டத்தின் கீழ் யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்விற்கு தயாராகி வரும், 1,000 மாணவர்களை மதிப்பீட்டு தேர்வு மூலம் தேர்வு செய்து, மாதம், 7,500 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 2025 மே, 25ல் நடக்க உள்ள யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வு எழுதும் மாணவர்கள், இத்திட்டத்திற்கு, கடந்த ஆக., 2 முதல், 17 வரை விண்ணப்பித்தனர். அவர்களுக்கான மதிப்பீடு தேர்வு, நேற்று தமிழகம் முழுதும் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், ஜெய் விகாஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்த தேர்வுக்கு, மாவட்டம் முழுதும் இருந்து, 373 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தேர்வில், 240 பேர் பங்கேற்றனர். 133 தேர்வர்கள் கலந்துகொள்ளவில்லை. இந்த மதிப்பீடு தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே இலவச பயிற்சி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.