இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணிகள் விறுவிறு நுால் வழங்க தாமதத்தால் விசைத்தறியாளர்கள் பாதிப்பு
ஈரோடு, ஈரோடு சரகத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி விரைவாக நடந்து வரும் நிலையில், நுால் வழங்க தாமதம், கூலி முழுமையாக வழங்காததால் விசைத்தறியாளர்கள் பாதிக்கின்றனர்.தமிழகத்தில், வரும் பொங்கல் பண்டிகையின்போது வழங்குவதற்காக, 1.14 கோடி சேலை, 1.18 கோடி வேட்டி உற்பத்தி செய்ய உத்தரவிட்டு, பணிகள் நடக்கிறது. மாநில இலக்கில், 40 சதவீதத்துக்கு மேல் ஈரோடு சரகத்தில் உற்பத்தியாகிறது. இங்கு, 57 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம், 15,000 தறிகளில், 25,000க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.உற்பத்தி குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு சரகத்தில், 49.49 லட்சம் சேலை, 58 லட்சம் வேட்டி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை, 12 லட்சம் சேலை, 20 லட்சம் வேட்டி உற்பத்தி பணி நிறைவு பெற்றுள்ளது. அவற்றின் தரம் பரிசோதித்து, மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். வேட்டி உற்பத்தி பணி அக்டோபர் இறுதிக்குள்ளும், சேலைகள் நவம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும். பள்ளி சீருடை துணியான, 96 லட்சம் மீட்டர் சட்டை துணி, 46 லட்சம் மீட்டர் பேன்ட் துணி, 28 லட்சம் மீட்டர் சுடிதார் மற்றும் டாப்ஸ் துணிகள் என, 1.70 கோடி மீட்டர் உற்பத்தி செய்து முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.இதுபற்றி, தமிழ்நாடு நெசவாளர் கூட்டமைப்பு அமைப்பாளர் கந்தவேல் கூறியதாவது: இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு தேவையான அளவு, சொசைட்டிகளுக்கு நுால் வராததால், 10க்கு, 4, 5 தறிகளில் முழு அளவு வேலை கிடைக்கவில்லை. இரவில் தறிகள் நிறுத்தப்படுகிறது. நெசவாளர்களுக்கு பாதி அளவு வேலை பாதிக்கிறது. ஒவ்வொரு சொசைட்டிக்கும் எவ்வளவு உற்பத்தி இலக்கு என்றும், அதற்கான நுாலை முன்னதாகவே வழங்க வேண்டும். கடந்த ஜூன் மாதமே இலவச வேட்டி, சேலை உற்பத்தி துவங்கியும், முழு அளவில் கூலியை சொசைட்டிக்கு, கைத்தறி மற்றும் துணி நுால் துறை விடுவிக்காததால், மூன்றில், ஒரு பங்கு கூலி நெசவாளர்களுக்கு கிடைக்கவில்லை. கூலியை விரைவாக வழங்குவதுடன், முழு அளவில் நுாலை வழங்கி, முழுமையாக தறிகள் இயங்கும்படி பணி தர வேண்டும். இவ்வாறு கூறினார்.