கூடைப்பந்து சங்கம் மூலம் பள்ளிகளில் இலவச பயிற்சி: சங்க தலைவர் தகவல்
நாமக்கல், நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நாமக்கல்லில் நேற்று நடந்தது. சங்க தலைவராக திருச்செங்கோடு பி.ஆர்.டி., ரிக் நிர்வாக இயக்குனர் பரந்தாமன் பதவியேற்றார். செயலாளராக நாமக்கல் கே.கே.பி., பைன் லினன் நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார், பொருளாளராக விக்னேஷ், துணைத்தலைவர்களாக சுரேஷ்குமார், பன்னீர்செல்வம், ராஜேஷ், அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பொறுப்பேற்றனர்.இணை செயலாளர்களாக ஜீவா, ரமேஷ், விமலேஸ்வரி, இந்துமதி ஆகியோர் பொறுப்பேற்றனர். சங்க புரவலர்கள் நடராஜன், முரளி ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு கூடைப்பந்துகளை வழங்கினர். மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவராக பொறுப்பேற்ற பரந்தாமன் பேசியதாவது: நாமக்கல் மாவட்டம், கல்வியில் மிகச்சிறந்து விளங்குகிறது. இங்கு ஏராளமான பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் உள்ளன. ஆனால், விளையாட்டுத்துறையில் நாமக்கல் மாவட்ட இளைஞர்கள் ஜீரோவில் தான் உள்ளனர்.கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் விளையாட்டில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து சங்கம் மூலம், நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில், கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இலவசமாக விளையாட்டு பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் சங்கம் மூலம் வாங்கி கொடுக்கப்படும்.மேலும், அவர்களை மாநில அளவிலும், தேசிய அளவிலும் சிறந்த வீரர்களாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, முதற்கட்டமாக, ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட தடகள சங்க செயலாளர் வெங்கடாஜலபதி, கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் சேர்மன் பெரியசாமி, தமிழ் சங்க தலைவர் டாக்டர் குழந்தைவேல், மாவட்ட சிறு குறு தொழில்கள் சங்க தலைவர் இளங்கோ, தொழில் அதிபர்கள் நல்லதம்பி, சத்தியமூர்த்தி, கணேசன், தயாளன் உள்பட பலர் பங்கேற்றனர்.