புதுச்சத்திரம் 4 ரோட்டில் அடிக்கடி ஏற்படும் விபத்து
சேந்தமங்கலம், புதுச்சத்திரம்-சேலம் பைபாஸ் சாலையில் இருந்து, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும், நான்கு ரோடு உள்ளது. இந்த நான்கு ரோட்டின் பிரிவில் இருந்து, இரவு, பகல் பாராமல் ஏராளமானோர் டூவீலர்களில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர். இந்த பிரிவில் எந்தவிதமான பாதுகாப்பு தடுப்புகளும் இல்லாமல் உள்ளதால், கிராமங்களில் இருந்து டூவீலர்களில் வரும் மக்கள், அஜாக்கிரதையாக சாலையை கடப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது.மேலும், இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலை மிகவும் துாரமாக உள்ளதால், மக்கள் இந்த சர்வீஸ் சாலையை பயன்படுத்தாமல் மெயின் ரோட்டை பயன்படுத்துவதால் விபத்து அதிகரித்துள்ளது. எனவே, இப்பகுதியில் நடக்கும் விபத்துகளை தடுக்கும் வகையில், தடுப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.