விசைத்தறிகளை நவீனப்படுத்த ரூ.50 கோடி மானிய நிதி அரசு ஒதுக்கீடு:கலெக்டர் தகவல்
நாமக்கல்: 'விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், தமிழக அரசு, 50 கோடி ரூபாய் மானியமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில் நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், 2025-26ம் ஆண்டிற்கான விசைத்தறிகளை நவீனமயமாக்குதல் திட்டம் மூலம், விசைத்தறி நெசவாளர்களுக்கு, தமிழக அரசு, 50 கோடி ரூபாய் மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின்படி, ஆண்டு தோறும், 3,000 விசைத்தறிகளை நவீனமாக்கும் வகையில், 30 கோடி ரூபாய் நிதியும், பொது வசதி மையங்கள், தறிக்கூடங்கள் மற்றும் தரப்பரிசோதனை ஆய்வகங்களின் உள்கட்டமைப்புகளை நிறுவும் வகையில், 20 கோடி ரூபாய் என, மொத்தம், 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசு உத்தரவிட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், 3 ஆண்டுகள் பழைய சாதா விசைத்தறிகளை நவீனப்படுத்துதல், புதிய நாடா இல்லாத ரேப்பியர் தறிகள் கொள்முதல் செய்தல், பொது வசதி மையம் நிறுவுதல், வார்ப்பிங் மற்றும் சைசிங் ஆலைகள், தரப்பரிசோதனை மையங்கள், மாதிரிகள் உற்பத்தி மையம், வடிவமைப்பு மையம் போன்றவை அமைக்கலாம்.விருப்பமுள்ளவர்கள், இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விபரங்களுக்கு, குமாரபாளையம் ஈகாட்டூர், எலந்தகுட்டையில் செயல்பட்டு வரும் திருச்செங்கோடு சரக கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.