உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு : நெறிமுறைகளை வகுக்க பண்ணையாளர் கோரிக்கை

வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு : நெறிமுறைகளை வகுக்க பண்ணையாளர் கோரிக்கை

நாமக்கல்: 'நாமக்கல் மண்டலத்தில் இருந்து, முட்டை ஏற்றுமதி, மூன்று மடங்கு உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு, வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, பண்ணையாளர்களுக்கு வழங்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.நாமக்கல் மண்டலத்தில், 1,200க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 8 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினமும், 5.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும், 90 சதவீத முட்டைகள், நாமக்கல் மண்டலத்தில் இருந்து தான் அனுப்பப்படுகின்றன. 15 ஆண்டுகளுக்கு முன், நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகளில், தினமும், 40 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையில், பறவை காய்ச்சல் பரவல் காரணமாக, வளைகுடா நாடுகள் இந்திய முட்டை ஏற்றுமதிக்கு தடைவிதித்தது. அதையடுத்து, முட்டை ஏற்றுமதி நாளுக்கு நாள் குறையத்துவங்கியது.இந்நிலையில், பத்து ஆண்டுகளுக்கு பின், முட்டை ஏற்றுமதி, 2022ல், மூன்று கோடியை தொட்டது. கடந்த, 2023 ஜன.,யில், 2.78 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டது. பிப்., 5.57 கோடி, மார்ச், 5.52 கோடி, ஏப்., 5.38 கோடி, மே, 5.38 கோடி என, முட்டை ஏற்றுமதி அதிகரித்தது. தற்போது, மாதம் ஒன்பது கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது கடந்த, 2022ஐ காட்டிலும், மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து, கால்நடை மற்றும் விவசாய பண்ணையாளர்களின் வர்த்தக சங்க பொதுச்செயலாளர் டாக்டர் செந்தில் கூறியதாவது:தற்போது, நாமக்கல் மண்டலத்தில் இருந்து இலங்கை, கத்தார், துபாய், ஓமன், மாலத்தீவு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் சிலவற்றிற்கு, தினமும், 30 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாதம் ஒன்றுக்கு சராசரியாக, 9 கோடி முட்டைகள் வரை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. குறிப்பாக, தடை நீடித்து வரும் குவைத், ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றிற்கு, அதிகளவில் முட்டைகளை அனுப்ப முடியும். அதனால், முட்டை ஏற்றுமதிக்கு, தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து பண்ணையாளர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை