நாமக்கல்: ஆக்கிரமிப்பு குறித்து புகாரளித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக, போலீசார் நடவடிக்கை எடுக்காததால், நாமக்கல் கலெக்டர் முன் அப்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இச்சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன்; டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுகந்தினி, 40. இவர், பிளஸ் 1 படிக்கும் தனது மகனுடன், நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் உமா, கோரிக்கை மனுக்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த சுகந்தினி, தனது பையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.இதை பார்த்த அருகில் இருந்தவர்கள், சத்தம் போட்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் சுகந்தினியிடம் இருந்து தீப்பெட்டியை பறிமுதல் செய்தனர். அங்கு வந்த கலெக்டர் உமா, சுகந்தினியிடம் விசாரணை நடத்தினார்.அப்போது சுகந்தினி கூறுகையில், மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,ல், அரசுக்கு சொந்தமான சாலையில், கழிவுநீர் டேங்க், வேகத்தடை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுதொடர்பாக, புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக, போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால், வேறு வழியின்றி, தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறினார்.இதையடுத்து, மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீசாருக்கு அறிவுறுத்தினார். மேலும், கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களை நன்கு சோதனை செய்தபின் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.