இரண்டு ஆண்டுகளுக்கு பின் இன்றுபள்ளத்து கருப்பனார் கோவில் விழா
ராசிபுரம்,:ராசிபுரம் அருகே உள்ள, பட்டணம் டவுன் பஞ்சாயத்து பகுதியில் பிரசித்தி பெற்ற பள்ளத்து கருப்பனார் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழா, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். கடந்த, 2023ம் ஆண்டு சித்திரை மாதம் திருவிழா நடந்தது. அதற்கு பின் இன்று நடக்கவுள்ளது.இக்கோவிலில் கருவறை என்ற கட்டடம் தனியாக இல்லை. மரத்தடியில் வேல் கம்புகளோடு மணிகளோடு தரைத்தளத்தில் அமைந்திருக்கும், பள்ளத்து கருப்பனாருக்கு திருவிழாவின் போது மட்டும் தான் மணி அடித்து பக்தர்களுக்கு தீபாராதனை காட்டுவது வழக்கம்.மற்ற விசேஷ நாட்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு, மலர்கள் துாவப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.பக்தர்களே சூடம் ஏற்றி வழிபாடு செய்வர். விழாவின்போது மட்டும்தான் கோவில் வளாகத்தில் கிடா வெட்டுவது வழக்கம்.இடைப்பட்ட காலத்தில் பொங்கல் வைத்து கிடா வெட்டுவது என்றால், வேறு இடம் அல்லது தீர்த்தம் வாங்கிச் சென்று தங்களது வீட்டிலேயே கிடா வெட்டிக் கொள்வது வழக்கம்.விழாவிற்காக கோவை, சென்னை, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலுார், கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கிடாக்களை பலியிடுவர்.