மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: சி.இ.ஓ.,
நாமக்கல், ''மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஆய்வு கூட்டத்தில், சி.இ.ஓ., எழிலரசி பேசினார்.மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது. டி.இ.ஓ., ஜோதி (தனியார் பள்ளிகள்) முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி தலைமை வகித்து பேசியதாவது:பள்ளியில் படிக்கும் எந்த ஒரு மாணவரையும், உடல் ரீதியாக எவ்வித துன்புறுத்தலும் ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள், பள்ளி நிர்வாகத்தினர் செய்யக்கூடாது. மாணவர்கள் உடல் ரீதியாக துன்புறுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.ஏற்கனவே, தனியார் பள்ளிகள் இயக்குனரால் வழங்கப்பட்ட அறிக்கைப்படி, பள்ளிகளில் கழிவறை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்த வேண்டும். அரசு பள்ளிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் அனைத்தையும், தனியார் பள்ளிகளிலும் பராமரிக்க வேண்டும். மாணவர்கள், போதை வஸ்துக்களை எடுத்து வருகின்றனரா என, ஆசிரியர்கள், முதல்வர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட போதை பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன், எமிஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திருஞானம், தனியார் பள்ளிகள் கண்காணிப்பாளர் விவேக் உள்பட பலர் பங்கேற்றனர்.