மா கவாத்து செயல் விளக்க பயிற்சி
சேந்தமங்கலம் சேந்தமங்கலம் வட்டாரம், பள்ளம்பாறை கிராமத்தில் மா கவாத்து குறித்த செயல் விளக்க பயிற்சி, நேற்று தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. அதில், மா கவாத்து செய்வதின் முக்கியத்துவம், அவசியம் குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி பேசினார். மா கவாத்து குறித்த செயல் விளக்க பயிற்சியை, தனியார் கல்லுாரி தோட்டக்கலை உதவி பேராசிரியர் திவ்யா தொகுத்து வழங்கினார். பயிற்சியில் மாமரம் நடவு செய்த, மூன்று ஆண்டுகளுக்கு பின் கவாத்து செய்ய வேண்டும். கவாத்து செய்யும் போது கூர்மையான, சுத்தமான கருவிகளை மட்டும் பயன்படுத்துவது மிக அவசியமாகும். இவ்வாறு கவாத்து செய்வதால், சூரிய வெளிச்சம் உள்ளே உள்ள அனைத்து கிளைகளுக்கும் கிடைத்து நன்கு தரமான, நோயற்ற ஆரோக்கியமான கிளைகள் உருவாகிறது. பின்னர் பூ பிடிக்கும் தன்மையும் அதிகரித்து, தரமான காய்கள் உற்பத்தியாகும். எனவே விவசாயிகள் அனைவரும் கவாத்து செய்வதன் முக்கியத்துவம் அறிந்து, மா மரங்களில் கவாத்து செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். சேந்தமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.